

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
தி.மு.க. கூட்டணியில் 70 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 164 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிடுகிறது. மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து, இன்றைய தினம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்கிடையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;-
“சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி கடந்த முறை என்னை பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். கொரோனா காலத்திலும், மழைக் காலத்திலும், வருடத்தின் அனைத்து நாட்களிலும் எனது தொகுதி மக்களுடன் நான் இருந்திருக்கிறேன். இந்த முறையும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என நம்புகிறேன்.
சென்னை எப்போதுமே தி.மு.க.வின் கோட்டைதான். சென்னைக்கு நிறைய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது. வடசென்னை வளர்ச்சி திட்டம், சாலை மேம்பாட்டுப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், புதிய மேம்பாலங்கள் என சென்னை மக்களுக்காக நிறைய திட்டங்களை செய்திருக்கிறோம். நிச்சயமாக சென்னை மக்கள் எங்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மீண்டும் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.