

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் தி.மு.க. மொத்தம் 164 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது. இதன்படி தி.மு.க. களமிறங்கும் தொகுதிகள் மற்றும் அதில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முழுவதுமாக வெளியிடப்பட்டது.
அதில் தி.மு.க.வும், பா.ஜ.க.வும் நேரடியாக 18 சட்டசபை தொகுதிகளில் மோதுவது தெரியவந்துள்ளது. முன்னதாக அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 18 இடங்களில் தி.மு.க.வின் வேட்பாளர்களை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர்களை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத சூழலில், இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
1.ஆவடி,
2.மயிலாப்பூர்,
3.திருவண்ணாமலை,
4.ராசிபுரம் (தனி),
5.கோவை வடக்கு,
6.திருப்பூர் தெற்கு,
7.திருவாரூர்,
8.தஞ்சாவூர்,
9.புதுக்கோட்டை ,
10.திருப்பத்தூர்,
11.மானாமதுரை (தனி),
12.சாத்தூர்,
13.ராமநாதபுரம்,
14.திருச்செந்தூர்,
15.வாசுதேவநல்லூர்,
16.ராதாபுரம்,
17.நாகர்கோவில்,
18.அவிநாசி (தனி) உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 5 தொகுதிகளில் பா.ஜ.க.வினர் சிட்டிங் அமைச்சர்களை எதிர்கொள்ள உள்ளனர். இதன்படி திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர்களை களமிறக்க உள்ளது.