

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது.
இந்த தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் - 28, தே.மு.தி.க. - 10, விடுதலை சிறுத்தைகள் - 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5, இந்திய கம்யூனிஸ்ட் - 5, ம.தி.மு.க. - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, முக்குலத்தோர் புலிப்படை 1, மனிதநேய ஜனநாயக கட்சி 1, எஸ்.டி.பி.ஐ. - 1, தமிழர் தேசம் கட்சி - 1 என கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 164 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு, பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கொளத்தூரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் பிரசார பாடலை தி.மு.க. இன்று வெளியிட்டுள்ளது. தி.மு.க.வின் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.