

சென்னை,
தி.மு.க.வுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வந்த காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க. தலைவர் விஜய்யை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன் எதிரொலியாக மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகிக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகளிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
திமுகவுடனான நீண்ட கால கூட்டணியைச் சந்தர்ப்பவாத நிலையெடுத்து, ஆட்சி அதிகாரம் எனும் சுகத்திற்காக, காங்கிரஸ் கட்சி முறித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை எல்லாக் காலங்களிலும் ஆதரித்த, தோளோடு தோள் நின்று கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியுள்ளது நம் கழகம்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக, அவரது சொந்தக்கட்சியினர் உள்பட மற்றவர்கள் முன்மொழியத் தயங்கிய நேரத்தில், சென்னையிலே 'இவர் தான் பிரதமர்' என ஆதரவு தெரிவித்து வாழ்த்தியவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனை அவர்கள் மறந்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்! வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.