

தென்காசி,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியில் களமிறங்கும் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமியை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரோடு ஷோ கலந்துகொண்டார். பின்னர் அவர் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கு முதல்வரும், அவரது மகனுமே காரணம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் மக்கள் உயிரிழந்தது திமுகவின் அரசின் அலட்சியத்தாலேயே நடந்தது. திமுக எம்.எல்.ஏக்கள் மணல் கொள்ளை மூலம் ரூ.5,000 கோடி சம்பாதித்து உள்ளனர். திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை திமுக, காங்கிரஸ் கட்சிகள் தடுத்துவிட்டன மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும். நிதி மக்களுக்கு செல்லவில்லை, திமுகவினருக்கே சென்றுள்ளது. திமுகவினரின் ஊழல் பணம் மீட்டெடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.