

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களை சந்திக்கும்போது, அவர்களுக்கான செயல்திட்டங்களை அறிவித்து வந்தார்.
இந்த நிலையில் த.வெ.க.வின் முழுமையான தேர்தல் அறிக்கையை விஜய் இன்று வெளியிட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் ‘மக்களின் தேர்தல் அறிக்கை' என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை விவசாயி நாராயணன் என்பவரிடம் வழங்கினார். தொடர்ந்து ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, திருநங்கை ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை பிரதிகளை விஜய் வழங்கினார்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு விஜய் பேசுகையில், “த.வெ.க.வின் வேட்பாளர்களும் நானும் வேறுவேறல்ல. நமது வீட்டைச் சேர்ந்த, நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத்தான் வேட்பாளர்களாக நான் தேர்வு செய்திருக்கிறேன். த.வெ.க. வேட்பாளர்களுக்கு நீங்கள் ஓட்டு போடுவது நமக்கு நாமே ஓட்டு போடுவது போன்றது. த.வெ.க. வேட்பாளர் ஜெயிப்பது நாம் ஜெயிப்பதைப் போன்றது.
எனவே தயவு செய்து விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். மே 4-ந்தேதி புதிதாக ஒரு ஒளி கிடைக்க வேண்டும். நமது த.வெ.க.வின் ஆட்சி அமைய வேண்டும். உங்கள் மகனுக்கு, உங்கள் பிள்ளைக்கு, உங்கள் அண்ணனுக்கு, உங்கள் தம்பிக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் எனது அம்மா, அக்கா, தங்கைகள் எல்லோருக்கும் எனது தரப்பில் இருந்து ஒரு சிறிய வேண்டுகோள். எனக்காக உங்கள் வீட்டு வாசலில் ‘விசில்’ சின்னத்தை கோலமாக போடுங்கள். அது இந்த விஜய்க்கு நீங்கள் கொடுக்கும் பெரிய ஆதரவாக இருக்கும்.
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அனைத்து தொகுதிகளிலும் நமது எம்.எல்.ஏ.க்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள். ஆனால் எனது தொகுதிக்கு நான் தானே பிரதிநிதி. இயற்கையின் துணையால், இறைவனின் துணையால், நாம் மனதார நேசிக்கும் தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற நாம் உறுதியாக ஆட்சிக்கு வருகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
தமிழ்நாட்டுக்கு நாம் என்னவாக இருந்தாலும், என்னுடைய தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ. தானே, என் வீட்டிற்கு நான் பிள்ளை தானே. அந்த வகையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் எப்போதும் எனக்கு கூடுதல் சிறப்பானதாக இருக்கும். எனவே என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை நான் கண்டிப்பாக வருவேன். நீங்களும் என்னை சந்திக்கலாம். என்னை சந்திப்பது ரொம்ப கஷ்டம் என்று நினைத்துவிடாதீர்கள். மிக எளிதாக என்னை சந்திக்கலாம். உங்கள் தேவைகளை நான் கேட்காமலேயே செய்து கொடுப்பேன். எனவே எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்”
இவ்வாறு விஜய் பேசினார்.