

புதுச்சேரி,
புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும், விவிபாட் இயந்திரங்களின் முதற்கட்ட குலுக்கல் முறை ஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது.
இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த 15-ந்தேதி 5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி வரும் ஏப்ரல் 9-ந்தேதி புதுச்சேரி, அசாம், கேரளாவில் சட்டமன்ற தேர்தலும், மேலும் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற உள்ளன.
தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 கட்டங்களாக ஒதுக்கப்படுகின்றன. தற்போது மாவட்ட கிடங்குகளில் இருந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்களை அனுப்பும் முதற்கட்ட ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.
இந்த ஒதுக்கீடு அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளிப்படையாக நடத்தப்பட்டது. குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட்ட இந்த இயந்திரங்களின் பட்டியல், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரங்கள் தற்போது அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். வேட்பு மனுக்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு 2-ம் கட்ட குலுக்கல் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் எந்த இயந்திரம் செல்லும் என்பது தீர்மானிக்கப்படும்.
அந்த வாக்கு இயந்திர பட்டியலும், போட்டியிடும் வேட்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும். தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.