

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந் தேதியும், தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந் தேதியும், அசாம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 20-ந் தேதியும், கேரள சட்டசபையின் பதவிக்காலம் மே 23-ந் தேதியும் நிறைவு பெறுகிறது.
புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந் தேதி முடிவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் கமிஷன் பணியாற்றி வருகிறது.
இதற்கிடையே மேற்கு ஆசிய மோதல் மற்றும் இந்தியாவில் நிலவும் எரிபொருள் விநியோக பிரச்சினைகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போகலாம் என பலராலும் பேசப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் அலுவலகங்களில் விசாரித்தபோது, தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என தகவல் கிடைத்தது.
கடந்த ஆண்டைப்போல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டத்தில், அதுவும் முதல் கட்டத்திலேயே தேர்தலை நடத்தி முடித்திட தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமாக இந்த 3 மாநிலங்களிலும் ஏப்ரல் 3-வது வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன. அசாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.