‘நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை’ - சீமான்

அரசியல் கட்சிகள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என சீமான் தெரிவித்தார்.
‘நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை’ - சீமான்
Published on

சென்னை,

சென்னை புதுப்பேட்டை பகுதியில் எழும்பூர் தொகுதி வேட்பாளர் சரண்யாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

“மாற்றத்திற்கான எண்ணம் மக்களின் மனதில் தோன்றியுள்ளது. ஊழல், லஞ்சத்தை மக்கள் வெறுக்கிறார்கள். நேர்மையான நிர்வாகத்தை எதிர்பார்க்கிறார்கள். இலவசத்தால் எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மக்களின் வாக்கை பறிப்பதற்காக நேர்மையற்ற ஆட்சியாளர்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் ஆட்சியாளர்கள் கடன் பெற்றுள்ளனர். கல்வி, மருத்துவம், குடிநீர், தரமான போக்குவரத்து என எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

இதற்கு ரூ.1 லட்சம் கோடி வட்டி கட்டுகிறோம். நாட்டின் நிதிநிலையே ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும் போது அதில் ரூ.1 லட்சம் கோடியை வட்டியாக கட்டிவிட்டால் எந்த நலத்திட்டத்தை நிறைவேற்ற முடியும்? தற்போது அறிவித்துள்ள இலவச திட்டங்களை நிறைவேற்ற மேலும் ரூ.5 லட்சம் கோடி கடன் பெற வேண்டும். இதனால், கூடுதலாக ரூ.1 லட்சம் கோடி வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும். மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது.

இலவசம் கொடுக்கும் கட்சிகளை வீழ்த்த வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளுக்கு இதுவரை நீங்கள் வாக்கு செலுத்தி வந்தீர்கள். உங்கள் வாக்குகளால் அவர்கள் வென்றார்கள். ஆனால், மக்களாகிய நீங்கள் தோற்று போய்விட்டீர்கள். நேர்மையற்ற ஆட்சியாளர்கள் நல் ஆட்சியை கொடுத்தோம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ரூ.8 ஆயிரம் கூப்பன், பிரிட்ஜ், ரூ.10 ஆயிரம் தருகிறோம் எனக்கூறி ஆசையை தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நல்ல ஆட்சி கொடுத்திருந்தால் கூட்டணியும், இலவச அறிவிப்புகளும் தேவையில்லை. எனவே, எது சரியானது என்று மக்கள் சிந்தித்துப்பார்த்து வாக்களிக்க வேண்டும். ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பளித்து பாருங்கள். அனைத்தும் மாறும். கல்வி, மருத்துவம், தடையற்ற மின்சாரம், தரமான போக்குவரத்து, படித்தவர்களுக்கு வேலை உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும் நாடாக இதை மாற்றுவோம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com