

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் வெளியான நிலையில், தி.மு.க. போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இதன்படி உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுத்ததற்காக தி.மு.க. பொதுச்செயலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மக்கள் மீண்டும் என ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தி.மு.க.வில் இந்த முறையில் தேர்தலில் போட்டியிட புதியவர்கள் நிறைய பேருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார். இளைஞர்கள் பலர் அரசியலுக்கு வர வேண்டும், இளைஞர்களின் நம்பிக்கையை தி.மு.க. இயக்கம் பெற வேண்டும் என்பதற்காக இளைஞர்களுக்கு தேர்தலில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. புதிதாக வாய்ப்பு கிடைத்தவர்கள் மக்களை சென்று சந்தித்து, தேர்தலில் வெற்றியைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக அரசு சார்பில் இரண்டு முறை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். பா.ஜ.க. இருப்பதால்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது. மத்தியில் பா.ஜ.க.வை அப்புறப்படுத்திவிட்டு, தமிழ்நாட்டில் மீண்டும் சுயமரியாதை இயக்கம் ஆட்சி அமையும்போது நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.