சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம்

தமிழ்நாடு தனி கோட்டையாக நின்று இந்தியாவுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம்
Published on

சென்னை,

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-

“தமிழகம் வெல்ல வேண்டும், தமிழ்நாடு வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். தி.மு.க. மீண்டும் வர வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பம், இதே ஆட்சி அமைய வேண்டும் என்பது நம் விருப்பம்.

என் ஒரு குரலுக்குக்காக, என்னுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்காக வந்திருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும் என் நன்றி உரித்தாகும். தமிழ்நாடே இப்பொழுது தனி கோட்டையாக நின்று இந்தியாவுக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது. அதில் முன்னணியில் நிற்கும் வீரர் உதயநதி ஸ்டாலின் என்றால் அது மிகையாகாது.

அவருடைய பெயரை சொல்லும் பொழுதே இங்கு குதூகலம் இருக்கிறது. நான் இதற்கு முன்னாள் இதே வீதிகளில் வந்திருக்கிறேன். அன்று பார்த்த வீதிகளை விட தற்போது சிறப்பாக இருக்கிறது. சாதனை என்பது சொல்வதல்ல, செய்துகாட்டுவதுதான்.

அதை செய்து காட்டிய இடத்திற்கு நான் வந்திருக்கிறேன். இனியும் இது சிறப்பாகும் என்ற நம்பிக்கையில் இங்கே வந்திருக்கிறேன். உலக அரங்கில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமான உதயநிதி ஸ்டாலின் மீண்டும் இங்கே வர வேண்டும்.

சேப்பாக்கம் என்று சொன்னால் உடனே விளையாட்டுதான் ஞாபகம் வரும். இந்தியாவுக்கே அது ஞாபகம் வரும். அந்த இடத்தின் வேட்பாளரான உதயநிதி ஸ்டாலினை நீங்கள் வெல்ல வைக்க வேண்டும். அவரை வெல்ல வைப்பது என்னை வெல்ல வைத்தது போலாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com