‘மதுரையை மணிப்பூராக மாற்றத் துடிக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி’ - மு.க.ஸ்டாலின்

கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை மதுரை மக்கள் முறியடித்தார்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘மதுரையை மணிப்பூராக மாற்றத் துடிக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி’ - மு.க.ஸ்டாலின்
Published on

மதுரை,

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;-

“அன்பு, பண்பு, விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற, பாசமிக்க மனிதர்கள் வாழும் ஊர் நம் மதுரை. தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகர், எப்போதும் திருவிழாக்கள் என அனைத்து நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் ஊர் மதுரை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன்.

மதுரையின் வளர்ச்சி என்றாலே தி.மு.க.தான். மேம்பாலம், சிலைகள் என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். வைகை வடகரை சாலை மேம்பாடு, சிட்கோ, 1.22 லட்சம் பேருக்கு இ-பட்டாக்கள் என ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரையின் மெரினா வண்டியூர் பூங்கா. நம் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக நடத்த ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கனவுக்கு கலைஞர் நூலகம் கைகொடுத்துள்ளது. மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து பலர் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் மீது பா.ஜ.க.வுக்கு வெறுப்பு. கீழடி அறிக்கையை வெளியிட மறுக்கிறது பா.ஜ.க. தமிழ்நாட்டின் டி.என்.ஏ.வுக்கு மாறாக இருக்கிறது என்.டி.ஏ. மதுரையை மணிப்பூராக மாற்றத் துடிக்கிறது தேசிய ஜனநாயக் கூட்டணி. மதுரை மக்கள் புத்திசாலிகள், கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை முறியடித்தார்கள்.

அமைதியை சிதைக்க தேசிய ஜனநாயக கூட்டணி துடிக்கிறது. அவர்களின் அடிமையாக அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி குட்டிச்சுவராக்கியுள்ளார். 2015 பட்ஜெட்டி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால் இதுவரை அதை நிறைவேற்றாதது தான் இவர்களின் லட்சணம்.

நம் திராவிட மாடல் அரசில் அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டில் நூற்றாண்டு நூலகம், கோவை பூங்கா உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு திறக்கப்பட்டன. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாடல் திராவிட மாடல் என தலைநிமிர வைத்துள்ளோம்.

பா.ஜ.க.வால் ஏன் நம்மைப்போல் வேகமாக செயல்பட முடியவில்லை. அவர்களின் வெறுப்பு அப்படிப்பட்டது. தாயின் மடி என கொண்டாடப்படும் கீழடி ஆய்வறிக்கையை பிரதமரும், பா.ஜ.க. அரசும் ஏற்க மறுக்கிறார்கள். மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை மறுத்த துரோக கூட்டணிதான் தேசிய ஜனநாயக கூட்டணி. 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை அ.தி.மு.க. சீரழித்தது. அதற்கு பா.ஜ.க. துணைபோனது.

‘தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் இல்லை, அரசின் பணம் எங்கே போகிறது’ என மத்திய மந்திரி பியூஷ் கோயல் கேட்கிறார். இந்தியாவிலேயே அதிக திட்டங்களை திராவிட மாடல் அரசுதான் செயல்படுத்துகிறது. எந்த புரிதலும் இல்லாமல் பியூஷ் கோயல் பேசியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் பணம் தமிழக மக்களுக்குத்தான் போகிறது.

மத்திய அரசுக்கு தமிழ்நாடு கட்டும் வரிப்பணம் எங்கே போகிறது? என்று நாங்கள் கேட்கிறோம். நாங்கள் மத்திய அரசுக்கு கொடுக்கும் பணம் எங்களுக்கு திரும்ப எவ்வளவு கிடைக்கிறது? அதே சமயம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு கிடைக்கிறது? இதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?

தேர்வில் எல்லா பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர், கிளாஸ் டாப்பராக இருக்கும் எங்களுக்கு பாடம் எடுக்கலாமா? முதலில் நீங்கள் பாஸ் மார்க் வாங்குங்கள். அதன்பிறகு வந்து தமிழ்நாடு பற்றி பேசுங்கள். நிதி நிர்வாகம் பற்றி பாடம் எடுக்கும் பா.ஜ.க.வின் ஆட்சியில், இந்திய பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது?

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை தூக்கி நிறுத்துவதாக சொன்னார்களே, இன்று நிலை என்ன? இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? எனும் போரில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பீர்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com