தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு: “தோழமை கட்சிகள் புரிஞ்சுக்கணும்..” - செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலா சீட் கொடுத்தது எப்படினு கேட்கலாமா? என்று கூட்டணி கட்சிகளுக்கு செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு: “தோழமை கட்சிகள் புரிஞ்சுக்கணும்..” - செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் தி.மு.க. கூட் டணி தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தி உள்ளது. முதல் கட்சியாக இந் திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அடுத்தபடியாக மனிதநேய மக்கள் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக ஒப்பந்தம் கையெழுத்தாகின. காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும், 28 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து கொ.ம.தே.க.வுக்கு நேற்று 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

தி.மு.க. கூட்டணியில் புதிய வரவாக தே.மு.தி.க. சேர்ந்துள்ளது. அந்த கட்சிக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பதவிக்கு எல்.கே.சுதீஷ் போட்டியின்றி தேர்வானார். தே.மு.தி.க.வும் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. அந்த கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை அந்த கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தொகுதிகள் குறைத்து வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை எழும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இரட்டை இலக்கத்தில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தெரிவித்துள்ளோம். பல புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு தொகுதிகளை தருவது சிரமம் என்று கூறியுள்ளனர். அதே சிரமத்திற்கு மத்தியில்தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலான தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இவர்களுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்கும்போது கம்யூனிஸ்டு கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் வழங்க முடியாது என்று கூறுவதில் நியாயம் இல்லை. எனவே, கடந்த முறையை விட கூடுதலாக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களின் முடிவு. இதை பேச்சுவார்த்தை குழுவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். தொகுதிகளை குறைத்துக் கொள்வது குறித்து பேசப்படும்பட்சத்தில் எங்களின் மாநிலக்குழு கூடி முடிவுகளை எடுக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை பெறுவது என்பது முக்கியம். அதேநேரத்தில் கட்சி யின் நலனும் முக்கியம்” என்று கூறினார்.

இந்நிலையில் தோழமை கட்சிகள் புரிஞ்சுக்கணும்.. உங்கள் உரிமைகளை கேளுங்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக மன நிறைவோடு மூன்று தொகுதிகளை கூடுதலாக வாங்கி இருக்கிறோம். உங்களின் உரிமையை கேளுங்கள், முதல்-அமைச்சருக்கு மனம் இருக்கிறது, இருந்தால் கொடுப்பார். காங்கிரஸ் கட்சிக்கு ஏன் கொடுத்தீர்கள் என்றால் எப்படி?. எங்களுடைய வேதனையை தோழமைக் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

100, 63, 41, 23 என அடுத்தடுத்து குறைவான தொகுதிகளிலேயே நின்றோம். 41 தொகுதிகளை எங்கள் தலைமை கேட்டது. அதை குறைத்து 28ஆக கொடுத்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com