

சென்னை,
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
தமிழக தேர்தல் களத்தில் கடந்த இருவாரத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக ஒரு பெரிய அலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்கள், கொங்குபகுதி, டெல்டா பகுதி என அனைத்து இடங்களிலும் திமுகவிற்கு எதிராக மக்களிடம் இருக்கும் கோவம் முழுமையாக களத்தில் வெளிப்பட ஆரம்பித்திருக்கிறது.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்காக கொண்டுவரப்பட்ட 33சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக வாக்களித்த திமுகவிற்கு 23-ந் தேதி தமிழ்நாட்டின் சகோதரிகள், தாய்மார்கள் அனைவரும் தக்க பாடம் புகுத்துவார்கள். மற்ற மாநில முதல்-மந்திரிகள் எல்லாம் தமிழகத்திற்கு வந்து பிரசாரம் செய்வது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், இதற்கு திமுகவிற்கு பிரசாரம் செய்யும் அனைவரும் பாஜக தமிழ்நாட்டிற்கு வந்து விடக்கூடாது என்று தான் பிரசாரம் செய்து வருகிறார்களே தவிர முக.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என பிரசாரம் செய்யவில்லை.
ராகுல் காந்தியும், மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்யாமல் தனித்தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி கோவில் வாசலில் தேங்காய் உடைக்கும் போது சிதறுவது போல சிதறிக் காணப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்பார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.