தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை பற்றி பேச ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது: எடப்பாடி பழனிசாமி
Published on

கோவை,

கோவையில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மக்களுக்கு நாமம் போட்டுவிட்டு கோவை தெற்கிற்கு வந்துவிட்டார் செந்தில் பாலாஜி. அரக்கனை விடக் கொடியவர். வைரஸை விட மோசமானவர் செந்தில் பாலாஜி. 5 கட்சிகளுக்கு சென்ற அமாவாசை. கோடு போட்டால் ரோடு போடுவாராம் செந்தில் பாலாஜி; கரூரில் ரோடு போட்டதில் ஊழல் செய்தவர்; 10 ரூபாய் கமிஷன் அடித்தவரை கோவையின் சிம்ம சொப்பனம் என்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கோவை செல்வம் கொழிக்கும் பகுதி என்பதால் இங்கு நிற்கிறார்.

மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தொகுதி மறுவரையறை இருக்கும். தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிப்பு இருக்காது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. தொகுதி மறுவரையறை பாதிக்காது என தெளிவாகக் கூறியும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்; பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை தடுக்க முயற்சிக்கிறார்.

நான் எங்கும் கருப்புக் கொடியை பார்க்கவில்லை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி ஜுரம் வந்துவிட்டது. நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்துள்ளார்?. எங்களைப் பற்றி பேச ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது?. திமுக கூட்டணியின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெஞ்ச் தேய்த்துக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து என்ன கொண்டு வந்தனர்? எல்லாம் பில்ட் அப், தந்திர நாடகம் ஆடுகிறார் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொய் வழக்குப் போட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அன்னைக்கு இருந்த பழனிசாமி வேற; இனிமே வர்ற பழனிசாமி வேற. தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக.

அதிமுக ஆட்சி அமைந்ததும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும், பெண்களுக்கு மாதம் ரூ.2,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும், நகர பேருந்துகளில் ஆண்களும் இலவசமாக பயணிக்கலாம். ஆட்சி மாறும்போது காட்சி மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com