“தயவு செஞ்சு உங்க விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.." கையெடுத்து கும்பிட்டு கேட்ட விஜய்

பாஜகவின் அடிமை யார் என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி என்று விஜய் தெரிவித்துள்ளார்.
“தயவு செஞ்சு உங்க விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.." கையெடுத்து கும்பிட்டு கேட்ட விஜய்
Published on

சென்னை,

தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைவருக்கும் வணக்கம். மிக மிக முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். மக்களை கண்டு கொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தலின் கடைசி பிரசாரம். ஸ்டாலின் சாரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியே ஆக வேண்டும். வரும் தேர்தலில் திமுக ஆட்சி முடிவுக்கு. வரும் தேர்தலில் திமுக ஆட்சி கதம் கதம். மக்களை கண்டுகொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? எத்தனை பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, தங்களை உயர்த்தி கொண்டனர்.

தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி, கடன் சுமையை உயர்த்தி உள்ளனர். இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்வி கடனையாவது ரத்து செய்து இருக்கலாம். கருத்து கணிப்பு என்ற பெயரில் கடுப்பில் கணிப்புகளை வெளியிடுகின்றனர். திமுக 300 சீட்டு, 200 சீட்டு என்று கடுப்பில் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகின்றனர். இந்தத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று சொல்கிறேன். கட்சியை காப்பாற்ற பாஜக காலில் திமுக விழும். கட்சியை காப்பாற்ற மோடி, அமித்ஷா காலில் திமுக விழுகிறதா? இல்லையா? என்று பாருங்கள். பாஜகவின் அடிமை யார் என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி.

ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று 10 முறை தோற்ற சேலத்துக்காரர் சொல்கிறார். உங்களால் சேலத்தை தாண்டி வேறு தொகுதியில் போட்டியிட முடியுமா?

சட்டமன்றத் தேர்தலில் இந்த இரண்டு பேருமே வேண்டாம். இது ஒரு மாற்றத்திற்கான தேர்தல். மாற்றி, மாற்றி வாக்கு செலுத்துவது மாற்றமில்லை. புதிதாக ஒருவரை கொண்டு வருவது தான் மாற்றம். ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து ஒருவனை எதிர்க்க காரணம், எல்லாரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகும் தேர்தல் இது. இந்த தேர்தலில் 75 வருட பவள விழா பாப்பாவையும், 55 வருட பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி எறிவோமா?

ஒவ்வொரு வீட்டில் இருக்கும், குட்டி நண்பா, நண்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுக்கு பிடிச்ச விஜய் மாமாவுக்காக விஜய் மாமா ஜெயிப்பதற்காக, தமிழ்நாடு ஜெயிப்பதற்காக உங்களுடைய வீட்டில் இருக்கிற அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, பெரியம்மா, பெரியப்பா, ஓட்டு போடும் வயதில் இருக்கும் அண்ணா, அக்கா எல்லாரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டுபோட சொல்லுங்கள்.

கரூர் சம்பவத்தில் என் மீது பழியை போட்டனர். போலீசார் அனுமதி கொடுத்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன். கரூருக்கு செல்லும் வழியில் காத்திருந்த மக்களை பார்க்காமல் அப்படியே வந்து விட முடியுமா? கரூரில் எந்த தவறும் செய்யவில்லை என்றால் உங்கள் அடிமையை கரூரில் இருந்து ஏன் கோவைக்கு அனுப்பினீர்கள்?

நாளை மறுநாள் ஏப்ரல் 23-ந்தேதி காலையிலேயே தயாராகி, வீட்டில் இருக்கும் சாமியை கும்பிட்டுவிட்டு உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் எல்லாரையும் கூப்பிட்டு சென்று விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். ஒருநாளும் பொய் சொல்லி உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். இங்கு 2 முனைப் போட்டிதான். ஒன்று தவெக. இன்னொன்று திமுக. உங்கள் விஜய்க்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com