‘வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதே கட்சி தலைமை எனக்கு கொடுத்த பணி’ - அண்ணாமலை

வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை.
‘வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதே கட்சி தலைமை எனக்கு கொடுத்த பணி’ - அண்ணாமலை
Published on

திருவனந்தபுரம்,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார்? என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் 27 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், பா.ஜ.க. மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அவர் கேட்ட தொகுதி கிடைக்காததால், தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அண்ணாமலை கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ‘எக்ஸ்’ தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தி.மு.க.வின் ஊழல் மற்றும் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் சகோதர, சகோதரிகள் அனைவரும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், கேரள மாநிலத்தில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-

“இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வதே கட்சி தலைமை எனக்கு கொடுத்த பணி. இதன்படி, வரும் 7-ந்தேதி வரை புதுச்சேரி மற்றும் கேரளாவில் நான் பிரசாரம் செய்ய உள்ளேன். அதன் பிறகு 23-ந்தேதி வரை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளேன். இதுவே கட்சி தலைமை எனக்கு கொடுத்த பொறுப்பாகும். அதனை நான் நிறைவேற்றுவேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com