”ரூ.3000 குடிநீருக்காக செலவு செய்யும் அவலம்” - புதுக்கோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

புதிய வளர்ச்சிப்பாதையில் புதுக்கோட்டை பயணிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”ரூ.3000 குடிநீருக்காக செலவு செய்யும் அவலம்” - புதுக்கோட்டையில் அண்ணாமலை பிரசாரம்
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியாவே கண்டிராத விஞ்ஞான ஊழல்களை செய்து தமிழகத்தை தலைகுனிய வைத்த தீயசக்தி திமுகவின் ஐந்தாண்டு கால காட்டாட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்தை மீட்டெடுக்கவும் மக்களுடன் கரம் கோர்த்து பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், அண்ணன் விஜயபாஸ்கரோடு இணைந்து பங்கேற்று உரையாற்றினேன்.

புதுக்கோட்டையில் கூடியிருந்த திரளான மக்களிடம் திமுகவின் மோசமான ஆட்சி முடியப்போகிறது என்கிற மகிழ்ச்சியையும், மாற்றத்திற்கான எழுச்சியையும் காண முடிந்தது. புதுக்கோட்டையின் போட்டோஷூட் எம்.எல்.ஏ முத்துராஜா, உண்மையில் வசூல்ராஜாவாக தான், கடந்த 5 ஆண்டுகளாக இருந்திருக்கிறார். தன்னுடைய தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைக்கு அவர் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட திமுகவினரால் தமிழக மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?

முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், 12 நாளுக்கும், 13 நாளுக்கும் ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுவதால், புதுக்கோட்டை மக்கள் மாதம் ரூ.3000 குடிநீருக்காக செலவு செய்யும் அவலநிலையை உருவாக்காகியுள்ளது திமுக அரசு. இந்த நிலை மாறவேண்டும். காவிரி - குண்டாறு - நல்லாறு இணைப்பு திட்டம், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என புதுக்கோட்டைக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுகவின் பொய்களை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள்.

கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக நல ஆர்வலர் ஜகபர் அலியை லாரியேற்றி கொன்ற அவலத்தை தமிழகமே பார்த்தது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் திமுக ஆட்சி இனியும் தமிழகத்தை ஆளக்கூடாது. எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரனை புதுக்கோட்டை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். புதிய வளர்ச்சிப்பாதையில் புதுக்கோட்டை பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வெல்லட்டும்! தமிழகத்தில் நல்லாட்சி மலரட்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com