

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி., தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, 10ம் தேதி கடலூர் கிழக்கு குறிஞ்சிபாடி தொகுதியிலும், 11ம் தேதி விழுப்புரத்தில் வானூர் மற்றும் விக்கிரவாண்டியிலும், 12ம் தேதி காஞ்சிபுரம் தெற்கில் மதுராந்தகத்திலும், 13ம் தேதி காஞ்சிபுரம் வடக்கில் செங்கல்பட்டிலும், 14ம் தேதி திருவள்ளூர் கிழக்கில் கும்மிடிப்பூண்டியிலும் திருமாவளவன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.