‘இதனால்தான் 5 தொகுதிகளுக்கு சம்மதித்தோம்..’ - வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி
சென்னை,
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது.
அதே சமயம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. இதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டிடப்போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிலையில், தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது வீரபாண்டியன் கூறியதாவது;-
“அமைதியான தமிழ் மண்ணை சீர்குலைக்க பா.ஜ.க. மற்றும் வகுப்புவாத சக்திகள் துடிக்கின்றன. ஒற்றுமையை சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அணி சேர்ந்திருக்கிறோம்.
கடந்த முறையை விட கூடுதல் இடங்கள் தேவை என தி.மு.க.விடம் கேட்டோம். தற்போது 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிகளை குறைத்துக் கொள்ள தி.மு.க. நிர்பந்திக்கவில்லை, கட்டளையிடவில்லை, அழுத்தம் தரவில்லை, கோரிக்கைதான் வைத்தனர்.
பெரியண்ணன் மனப்பான்மையில் தி.மு.க. ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டனர். 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் குறைத்துக் கொண்டோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

