

சென்னை,
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதில் இருந்தும் வந்திருந்த அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
தொழிலாளர்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் ஆட்சியை மாற்றிக் காட்டக்கூடிய வல்லமை அவர்களுக்கு இருக்கிறது என ஸ்டாலின் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கஜானா நிரம்பி இருக்கும், திமுக ஆட்சிக்காலத்தில் கஜானா காலியாகிவிடும். திமுக ஆட்சியில் கோபாலபுரத்து கருவூலம் மட்டும் நிரம்பும். அதனை பறிமுதல் செய்தாலே, தமிழ்நாட்டின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும். அரசு போக்குவரத்து ஊழியர்கள் தட்டெடுத்து போராட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆர்ப்பாட்டம் முடிந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக - தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை எங்களுக்கு எதிரி திமுக. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று எண்ணம் கொண்ட ஒத்த கட்சிகள், எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு வந்தால், திமுகவை வீழ்த்த முடியும். யார் வேண்டுமானாலும் எங்கள் தலைமையை ஏற்றுக் கொண்டு, எங்களுடன் வரலாம்” எனத் தெரிவித்தார்.
சசிகலா கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அந்தவகையில் சசிகலா கட்சி தொடங்கி இருக்கிறார். இது குறித்து நாம் பதில் சொல்லவேண்டியதில்லை என்றார்.