திருச்சியில் மூன்று மத வழிபாட்டுத் தலங்களில் த.வெ.க. தலைவர் விஜய் பிரார்த்தனை

அந்தோணியார் கோவிலுக்கு சென்ற விஜய், அங்கு முழங்காலிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
திருச்சியில் மூன்று மத வழிபாட்டுத் தலங்களில் த.வெ.க. தலைவர் விஜய் பிரார்த்தனை
Published on

திருச்சி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 2-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அன்றைய தினமே அங்குள்ள மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே தனது பிரசாரத்தை தொடங்கினார்.

தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து விஜய் தேர்தல் பிரசாரங்களையும், ரோடு ஷோ நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று விஜய் திருச்சி புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த விஜய், விமான நிலையத்தில் இருந்து தனது பரப்புரை வாகனத்தின் மீது நின்றவாறு சாலை மார்க்கமாக சாலை வலம் சென்றார். இந்த ரோடு ஷோவில் ஆயிரக்கணக்கான த.வெ.க. தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று திருச்சியில் மூன்று மத வழிபாட்டுத் தலங்களில் த.வெ.க. தலைவர் விஜய் பிரார்த்தனை செய்தார். முதலாவதாக அந்தோணியார் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு முழங்காலிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். தொடர்ந்து அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த இஸ்லாமியர்கள் விஜய்க்காக பிரார்த்தனை செய்தனர். அந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட விஜய், அவர்களிடம் இருந்து வாழ்த்து பெற்று அங்கிருந்து புறப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஸ்ரீ பச்சநாச்சி அம்மன் கோவிலுக்கு விஜய் சென்றார். அங்கு விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்த விஜய், தரையில் விழுந்து வணங்கி அம்மனை வழிபட்டார். பின்னர் ரோடு ஷோ நிகழ்ச்சியை நிறைவு செய்து, திருச்சியில் இருந்து விஜய் சென்னை புறப்பட்டார் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com