தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு: பெருந்தலைவர் மக்கள் கட்சி முடிவு

நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி முடிவு செய்திருப்பதாக அக்கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டுவது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மை சமுதாயங்களில் ஒன்றான நாடார் சமுதாய மக்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகவும் தென் மாவட்டங்களில் அடர்த்தியாகவும் வாழ்ந்து வரும் சமுதாயங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய இடத்தில் நாடார் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களை ஒன்றிணைத்து எடப்பாடியார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிவாகை சூடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து நாடார் சமுதாய மக்களை ஓரணியில் திரட்டி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார் பேரவை பாடுபடும்.

தமிழ்நாடு முழுவதும் அமைப்பு ரீதியாக உள்ள 54 மாவட்ட நிர்வாகிகளையும் தேர்தல் பணியில் முடுக்கி விட்டு அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com