

புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தில் தவெக 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தவெக 28 வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளான நேயம் மக்கள் கழகத்தின் 2 வேட்பாளர்கள் என 30 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய விஜய்க்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
இந்தநிலையில், தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது புதுச்சேரி தவளகுப்பத்தில் பிரசாரத்தின்போது மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமு என கூறுவதற்கு பதிலாக, பாஜக வேட்பாளரும், சபாநாயகருமான செல்வம் என மாற்றி கூறியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பதறிப்போன வேட்பாளர், தன் பெயர் ராமு எனக் காதருகே சென்று கூறியபின் சுதாரித்த விஜய், `வேட்பாளர் ராமு' என மாற்றிக் கூறிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கொளத்தூர் வேட்பாளர் வி.எஸ்.பாபுவுக்கு பதிலாக பிரபுவை குறிப்பிட்டு பேசிய விஜய் “நான் வேறு அவர் வேறு அல்ல தயவு செய்து விசில் சின்னத்திற்கு உங்கள் வாக்கை அளியுங்கள்” என பேசினார். கொளத்தூர் தொகுதி வேட்பாளர் பெயரை மாற்றிக்கூறி வாக்கு சேகரித்த சம்பவம் அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது.