

நீலகிரி,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அவர், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாகவும், மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “இலவசம் வேண்டும் என்று எந்த மக்களும் கேட்கவில்லை. இவர்கள்தான் வலுக்கட்டாயமாக திணிக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இலவச அறிவிப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் மாதம் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும்.
அவரது ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்று கூட விஜய் பேசவில்லை. அவருக்கு இருக்கும் பிரச்சினை பற்றி துணிந்து வாய்திறந்து விஜய் பேச மறுக்கிறார். அதையும் கூட நாங்கள்தான் பேசுகிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என்று தெரிவித்தார்.