

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்த தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ் - 28, தே.மு.தி.க. - 10, விடுதலை சிறுத்தைகள் - 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5, இந்திய கம்யூனிஸ்ட் - 5, ம.தி.மு.க. - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனிதநேய மக்கள் கட்சி - 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2, முக்குலத்தோர் புலிப்படை - 1, மனிதநேய ஜனநாயக கட்சி - 1, எஸ்.டி.பி.ஐ. - 1, தமிழர் தேசம் கட்சி - 1 என கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 164 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டு, பிரசாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது. இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் இன்று தேநீர் விருந்து அளித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, பெ.சண்முகம், திருமாவளவன், கமல்ஹாசன், தமிமுன் அன்சாரி, வைகோ, துரை வைகோ, ஜவாஹிருல்லா, நெல்லை முபாரக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த தேநீர் விருந்தின் போது, தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இந்த கூட்டணி புதிதாக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல. ஏற்கனவே இருந்த கூட்டணியை விட, இந்த முறை இன்னும் சில கட்சிகள் நமது கூட்டணியில் இணைந்துள்ளன.
எல்லா பிரச்சினைகளையும் கடந்து வெற்றிகரமாக கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இல்லாத அளவிற்கு இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து இருக்கக் கூடிய கூட்டணியாக நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.