‘நாட்டு மக்களின் வலிகளில் எதை விஜய் தாங்கினார்?’ - சீமான் கேள்வி

படம் வெளியாகவில்லை என்பது விஜய்யின் தனிப்பட்ட வலி என சீமான் தெரிவித்துள்ளார்.
‘நாட்டு மக்களின் வலிகளில் எதை விஜய் தாங்கினார்?’ - சீமான் கேள்வி
Published on

திருச்சி,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரசாரத்தின்போது, ‘அனைத்து வலிகளையும் தாங்கிக் கொண்டு தமிழக மக்களுக்காக அரசியலுக்கு வந்திருக்கிறேன்’ என்று கூறினார். இந்நிலையில், விஜய்யின் பேச்சு குறித்து திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது சீமான் கூறியதாவது;-

“வலி என்றால் எந்த வலி? 840 மீனவர்கள் செத்தார்களே அந்த வலியா? ஆந்திராவின் காடுகளுக்குள் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களே அந்த வலியா? 450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே அந்த வலியா? துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்களே அந்த வலியா?

இலங்கையில் ஒரு தேசிய இனம் தனது விடுதலைக்காக 30 ஆண்டுகள் அறவழியிலும், 35 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடியது. அந்த தேசிய இனத்தின் கனவை பொசுக்கி நாசமாக்கிய கட்சிகள் இந்த நிலத்தில்தான் ஆட்சியில் இருக்கின்றன. 2008-09ம் ஆண்டுகளில் மட்டும் எனது மக்கள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள். அந்த வலியை இவர் தாங்கினாரா?

262 வழக்குகள் என் மீது போடப்பட்டுள்ளன. நான் ஏறாத நீதிமன்ற படிக்கட்டு கிடையாது. நான் போகாத சிறை இல்லை. எனது பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு 14 ஆண்டுகளாக எந்த நாட்டிற்கும் செல்ல விடவில்லை.

படம் வெளியாகவில்லை என்பது உங்கள் தனிப்பட்ட வலி. சொந்த வலி என்பது மக்களுக்கான வலி இல்லை. என் வலியை மக்களிடம் சொல்வதற்காக வரக்கூடாது. மக்களின் வலியை சுமந்து அதற்கு தீர்வு காண வேண்டும். அவன்தான் தலைவன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com