விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்? - என்.ஆனந்த் விளக்கம்

வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்த விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது ஏன்? - என்.ஆனந்த் விளக்கம்
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரம்பூர் தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், அந்த தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

பெரம்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், அங்கிருந்து நேராக கொளத்தூர் தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதற்காக விஜய்யின் பிரசார வாகனம் கொளத்தூர் நோக்கி சென்ற நிலையில், அவரது வாகனத்தை சுற்றி பொதுமக்கள் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, கொளத்தூரில் விஜய் பேசியபோது இடையில் ஆடியோ பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 4 நிமிடங்களில் விஜய் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு, கொளத்தூரில் இருந்து வில்லிவாக்கம் புறப்பட்டார்.

ஆனால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்த விஜய், நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதால் வில்லிவாக்கத்தில் கூடியிருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசிய மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், “பாதுகாப்பு குறைபாடு காரணமாக விஜய்யின் வில்லிவாக்கம் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் விஜய் வில்லிவாக்கத்திற்கு வருவார்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனு தாக்கல் மற்றும் பிரசாரத்திற்கு செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனை பிரசார கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com