“தலைமை செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக..” - தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்

டி.வி.ஏ.சி.யின் தலைமை இயக்குநராக நியமித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

எந்தவித புகார்களும் இல்லாத நிலையில் தலைமை செயலாளரை மாற்றிய உத்தரவுகளை திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, அதன் நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், 8.4.2026 தேதியிட்ட உத்தரவின் வாயிலாக, தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த என்.முருகானந்தம் பதிலாக, எம். சாய் குமார் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக ஆணையம் நியமித்துள்ளது.

இந்தத் தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற பணிமாறுதலுக்கு, திமுக தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இதற்கான எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படவில்லை. மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எந்தவிதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எந்தவிதமான தர்க்கரீதியான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தாலும், அதனால், அரசாங்கத்தின் செயல்பாடுகள் முடங்கிவிட கூடாது. அடுத்த அரசு அமைந்து புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரையில், நிர்வாகத்தில் ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, அரசியல்கட்சித் தலைமைத் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் இந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்து நெறிப்படுத்துபவர் தலைமைச் செயலாளரே ஆவார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இந்த மாதத்தில், நிர்வாகம் சார்ந்த பல்வேறு வழக்கமான கோப்புகள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட பல முக்கியப் பணிகள் கையாளப்பட வேண்டியுள்ளன. முருகானந்தம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வருவதால், தேர்தல் காலத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் எந்தவிதத் தடையுமின்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு மிகவும் பொருத்தமானவர் அவரே ஆவார்.

இத்தகைய சூழலில், 8.4.2026 தேதியிட்ட தங்கள் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டு, என்.முருகானந்தம் இஆப-வை மீண்டும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகப் பணியமர்த்துமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதியிட்ட உத்தரவின் வாயிலாக, டாக்டர் சந்தீப் மிட்டல் ஐபிஎஸ், காவல்துறை தலைமை இயக்குநராக ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்பு & கண்காணிப்புப் பிரிவு) தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியாகவும், மிகப்பெரிய அரசியல் கட்சியாகவும் திகழும் திமுக சார்பில், டாக்டர் சந்தீப் மிட்டல் அவர்களை டிவிஏசி -இன் தலைமை இயக்குநராக நியமித்திருப்பதற்கு எங்களின் கடும் ஆட்சேபணையைத தெரிவித்துக் கொள்கிறோம். முதலாவதாக, டிவிஏசி-இன் தலைமை இயக்குநர் (டிஜிபி) பதவிக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவனம், பாஜகவின் தேர்தல் முகவராகச் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கும் இந்நாட்டின் சட்டங்களுக்கும் மேலானது என்று, ஆணையத்தில் உள்ள எவருடைய மனதிலும் எவ்விதத் தவறான எண்ணமும் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்திய மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அவை அசாமில் (அங்கு எந்தவொரு உயர் அதிகாரியும் இடமாற்றம் செய்யப்படவில்லை) தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. சொல்லப்போனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போதே, பாஜகவைச் சேர்ந்த அசாம் முதல்-மந்திரியின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அசாம் காவல்துறை ஒருதலைப்பட்சமான மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

எனவே, 8.4.2026 தேதியிட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை திரும்பப் பெறுமாறும்; தமிழ்நாட்டில் ஆயுதப்படைகள், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுகளின் தலைமை இயக்குநராகப் பணியாற்றும் டாக்டர் சந்தீப் மிட்டலை அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறும், தலைமைத் தேர்தல் ஆணையர், மற்றும் தேர்தல் ஆணையர்கள் இருவர் ஆகிய மூவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நீங்கள் இணங்கத் தவறும்பட்சத்தில், சட்டத்திற்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com