

முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உப்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் கஜா புயலின்போது சேதம் அடைந்தன. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல் கஜா புயலுக்கு பிறகு குடிநீர் வினியோகம் இதுவரை சீராகவில்லை. சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், கிராமத்தில் குடிநீர்-சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரியும், புயலால் பழுதடைந்த தெருவிளக்குகளை உடனே சரி செய்யக்கோரியும், உப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் சாலையோரத்தில் தென்னை ஓலையை போட்டு அதில் காலிக்குடங்களை அடுக்கி ஒப்பாரி வைத்தனர். போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
கிராம கமிட்டி தலைவர் ராஜேந்திரன், சமூக ஆர்வலர் செல்வரெத்தினம், நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாரதிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கிராம மக்கள் சாலையோரம் காலிக்குடங்களை வரிசையாக அடுக்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். கிராம மக்களின் இந்த நூதன போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அனைத்து கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.