கருணை கொலை செய்யக்கோரி தந்தை வழக்கு: சிறுவனின் உடல்நிலையை ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு

கருணை கொலை செய்யக்கோரி தந்தை வழக்கு: சிறுவனின் உடல்நிலையை ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.
கருணை கொலை செய்யக்கோரி தந்தை வழக்கு: சிறுவனின் உடல்நிலையை ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு
Published on

சென்னை,

வலிப்பு நோய் மற்றும் மூளை பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனை கருணை கொலை செய்யக்கோரி தந்தை தொடர்ந்த வழக்கில், அந்த சிறுவனின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள் குழுவை அமைக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடலூரை சேர்ந்தவர் திருமேனி. டெய்லரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்களும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகன் பிறந்ததில் இருந்து பேசவும் இல்லை. சுற்றியிருப்பவர்களை அடையாளம் காணவும் முடியவில்லை. அவனுக்கு அடிக்கடி வலிப்பு வருகிறது. மூளையும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவனால் எதுவும் செய்யமுடியவில்லை.

குழந்தைகள் நல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் எந்த பயனும் இல்லை. தற்போது என் மகனுக்கு தினமும் 20 முறை வலிப்பு வருகிறது. அதற்கான மருந்து கொடுத்தால் வலிப்பு அதிகரிக்கிறது. அவனுக்கு வலுக்கட்டாயமாகத்தான் உணவு கொடுக்க வேண்டியுள்ளது. டாக்டர்கள் அவனை குணப்படுத்த முடியாது என்று கூறிவிட்டனர். மேற்கொண்டு சிகிச்சை அளிக்க எனக்கு வசதி இல்லை.

இதனால் என் மகள்களும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமாக்க முடியவில்லை என்ற நிலை ஏற்படும்போது, நோயாளியை கருணைக்கொலை செய்ய அனுமதி அளிப்பது தவறில்லை என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, எனது மகனையும் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அந்த சிறுவனின் நோய் மற்றும் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய டாக்டர்கள் குழு ஒன்றை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com