

தூத்துக்குடி,
கந்து வட்டியை தடுக்க தனியாக போலீஸ் பிரிவு அமைக்க வேண்டும் என்ற பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நெல்லையில் கந்துவட்டியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து உள்ளது. ஆனால் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதவி மற்றும் அமைச்சரவையை காப்பாற்றிக் கொள்வது, இரட்டை இலை சின்னத்தை எப்படி பெறுவது என்பதற்கே முக்கியத்துவம் தருகின்றனர். அவர்கள் தமிழக மக்களை பற்றி கவலைப்படவில்லை.
கந்து வட்டியை கட்டுப்படுத்த 2003ம் ஆண்டு தமிழ்நாடு அரசு தனி சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தை போலீசார் முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம் குறித்து மக்களுக்கும் விளக்கப்படவில்லை. போலீசார் கந்து வட்டிக்கு உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது. நிலமோசடி தடுப்புக்கு தனியாக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அதே போன்று கந்து வட்டிக்கு தனியாக போலீஸ் பிரிவு அமைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசிடம் ரூ.245 கோடி நிதியுதவியை மாநில அரசு கோரி உள்ளது. அந்த நிதியை பெற்று முறையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் எப்போது கட்சி ஆரம்பிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் வருவேன் என்றார். கமலஹாசன் வந்து விட்டேன் என்றார். ஆனால் அவர்கள் 2.0 படத்துக்காகவும், பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிக்காவும் ரசிகர்களை சந்தித்தனர். மக்கள் இவர்கள் வருவார்கள், மாற்றம் தருவார்கள் என்று நம்ப வேண்டாம். தமிழ்நாட்டில் மழை நீரை சேகரிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதும் மழைநீர் கடலில் கலக்கும் நிலை உள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள், சிறு, குறு வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் உள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 8ந் தேதி எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்புதினமாக கடைபிடிக்கப்படுகிறது. அப்போது நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சியினர் கருப்புசட்டை அணிந்து பங்கேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிட்டு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.