

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (திங்கட்கிழமை) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் பெங்களூருவில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பசவராஜ் பொம்மை முடிவு
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது.
ஆனாலும் பெங்களூருவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் இருக்கிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் பெங்களூருவில் மட்டும் 91 ஆயிரத்து 637 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கவும், கொரோனா 3-வது அலையை எதிர் கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார்.
ஆலோசனை
இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் மந்திரிகள், அதிகாரிகள், நிபுணர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்குக்கு எதிர்ப்பு
இந்த ஆலோசனை கூட்டத்தின் போது நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரையின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பெங்களூருவில் அதிவேகமாக கொரோனா பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்துவதற்கு, ஓட்டல் உரிமையாளர்கள், மதுபானக்கடை நடத்துபவர்கள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்தும் அதிகாரிகளுடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசிக்க உள்ளார். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பெங்களூரு உள்பட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.