

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பேரிஜம் ஏரிக்கு சென்று வந்தனர். இதற்காக வனத்துறையினரிடம் அனுமதி பெறவேண்டும். இந்த ஏரிக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுவதாக கூறி, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரிக்கு செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். இதையடுத்து பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேரிஜம் ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள நுழைவுவாயிலை திறந்து வைத்தார். அப்போது அவர் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்றார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
அதன் பின்னர் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. கொடைக்கானல் சுற்றுலா வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் மணி மற்றும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள ஏராளமானவர்கள் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அனுமதி அளித்து மாவட்ட வன அலுவலர் திலீப் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நாளை முதல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளின் 50 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தொடர்ந்து வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.