ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Published on

ஊட்டி

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை

நீலகிரி மாவட்டம் ஊட்டி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனினும் ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும்.

அதன்படி இந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கி விட்ட நிலையிலும், இதுவரை எதிர்பார்த்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வராமல் இருந்தனர். இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு, இன்று புனித வெள்ளி, நாளை(சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனம், கார் மற்றும் பஸ்களில் நேற்று மாலை முதலே ஊட்டிக்கு வந்து கொண்டு இருந்தனர். இன்று காலையில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதேபோன்று ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், முதுமலை புலிகள் காப்பகம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர். பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

களைகட்டியது

இதற்கிடையே ஊட்டியில் உள்ள லாட்ஜ், காட்டேஜ் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளிலும் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. அதன்பிறகு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அறைகளுக்கு முன்பதிவு செய்ய தொலைபேசி மூலமோ, இணையதளம் மூலமோ தொடர்பு கொண்டு பார்த்தால் அறைகள் காலியாக இல்லை என்ற தகவலே வருகிறது.

இதனால் ஊட்டிக்கு வர விரும்பும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது பயணத்தை தள்ளி வைத்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டியில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல், கோடை சீசனில் ஊட்டி களையிழந்து காணப்பட்டது. இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வர தொடங்கிவிட்டதால் ஊட்டி களைகட்டி வருகிறது. இதனால் அவர்களை நம்பி பிழைப்பு நடத்தி வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com