நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு புதுவை நகரப்பகுதியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
Published on

புதுச்சேரி

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு புதுவை நகரப்பகுதியில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுவையில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகள் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி அளவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி புதுவை நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

போக்குவரத்து மாற்றம்

புதுவையில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்பட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி அளவில் அங்கிருந்து ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதையொட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலாப்பட்டு பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் வழியாக சிவாஜி சிலை, கொக்குபார்க், ராஜீவ்காந்தி சிலை, இந்திராகாந்தி சிலை, நெல்லித்தோப்பு வழியாக வரவேண்டும்.

அதேபோல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, முத்தியால்பேட்டை வழியாக காலாப்பட்டு மற்றும் இ.சி.ஆர். சாலையில் சென்னை செல்லும் பஸ்கள் மற்றும் அனைத்து கனரக, இலகு ரக வாகனங்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெங்கடசுப்பாரெட்டியார் சிலை சதுக்கத்தில் திரும்பி மறைமலையடிகள் சாலை வழியாக இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை வழியாக காலாப்பட்டு மற்றும் சென்னைக்கு செல்ல வேண்டும்.

முற்றிலும் தடை

காமராஜ் சாலையில் லெனின் வீதியில் இருந்து ராஜா தியேட்டர் வரை மதியம் 12 மணிமுதல் மாலை 5 மணிவரை அனைத்து விதமான வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

மேலும் இந்த விநாயகர் சிலை ஊர்வலமானது சாரம் அவ்வை திடலில் தொடங்கி காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி வழியாக அஜந்தா சந்திப்பை அடைந்து எஸ்.வி.பட்டேல் சாலை வழியாக கடற்கரை சாலை செல்ல உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்குமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com