அதிகாரிகள் தடையாக இருந்தால் இடமாற்றம்

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்தார்.
அதிகாரிகள் தடையாக இருந்தால் இடமாற்றம்
Published on

புதுச்சேரி

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மண் சேகரிப்பு

சுதந்திர தினவிழாவையொட்டி, 3 நாட்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் கலசங்களில் புனித மண் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுவையில் 108 கிராம பஞ்சாயத்துகள் உள்பட 125 இடங்களில் மண் சேகரிக்கப்பட உள்ளது. அவை அனைத்தும் வருகிற 17-ந் தேதி அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் வைத்து வழங்கப்படும். பின்னர் டெல்லிக்கு எடுத்து சென்று வருகிற 27-ந் தேதி பிரதமரிடம் ஒப்படைக்கப்படும்.

இடமாற்றம்?

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள தியாகச் சுவர் காணொலிக் காட்சி மூலமாக பிரதமர் விரைவில் திறந்து வைக்க உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கவர்னர், முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த சில அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவது இல்லை என்று முதல்-அமைச்சர் வேதனை அடைந்துள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் மத்திய அரசிடம் புகார் தெரிவித்து அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். தலைமை செயலாளர் மற்றும் செயலாளர்களாக இருந்தால் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். புதுச்சேரி குடிமை பணி அதிகாரிகளாக இருந்தால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அந்த அடிப்படையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

ரூ.528 கோடி

புதுச்சேரியில் சட்டசபைக்கு புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு கேட்ட அனைத்து கேள்விகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் திட்ட வரைவு ரூ.528 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அந்த கட்டிடத்திற்கு வயரிங் உள்பட அனைத்து பணிகளும் அடங்கும். இதற்கான கோப்பு பொதுப்பணித்துறை செயலரிடம் இருந்து அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய அரசின் அனுமதி விரைவில் கிடைத்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசியக்கொடி

முன்னதாக, சுதந்திர தின விழாவை முன்னிட்டு தனது மணவெளி தொகுதியான புதுக்குப்பத்தில் உள்ள வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் தொகுதியில் உள்ள வீடுகளுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பா.ஜ.க. தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் மணவெளி தொகுதி கலைவாணன், தங்கத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com