லாரிகள் நேருக்கு நேர் மோதல்; 3 பெண் பக்தர்கள் பலி 17 பேர் படுகாயம்
செங்கம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு பகுதியை சேர்ந்த சுமார் 50 பேர் ஒரு லாரியின் மூலம் மேல்மருவத்தூருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். லாரியை டிரைவர் ரஜினி ஓட்டிச்சென்றார்.
அந்த லாரி நேற்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள மேல்செங்கம் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பெங்களூருவில் இருந்து எதிரே வந்த லாரியும் மேல்மருவத்தூரிலிருந்து திரும்பிய இந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சிக்கியவர்கள் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்களும், அந்த வழியாக சென்றவர்களும் அங்கு சென்று மீட்பு பணியை தொடங்கினர். தகவல் அறிந்த செங்கம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கோவிலுக்கு சென்று திரும்பிய காரப்பட்டு பகுதியை சேர்ந்த சாந்தி (வயது 45) மற்றும் சரிதா (27) ஆகிய பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வசந்தி (26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். மேலும் 17 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே விபத்து நடந்ததும் மேல்மருவத்தூரிலிருந்து திரும்பிய லாரியின் டிரைவர் ரஜினியும், மற்றொரு லாரியின் டிரைவரும் தப்பி ஓடிவிட்டனர்.
விபத்து குறித்த புகாரின்பேரில் மேல்செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதி, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய 2 லாரிகளின் டிரைவர்களையும் தேடி வருகின்றனர்.

