

தளி
அமராவதி அணை பாசனத்தில் நெல் சாகுபடியே பிரதானமாகும். அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பருவமழை கை கொடுத்து உதவினால் மட்டுமே 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அமராவதி ஆறு மூலமாக கிணறு, ஆழ்குழாய் கிணறு போன்றவற்றில் ஏற்படுகின்ற நிலத்தடி நீரைக்கொண்டு தென்னை, வாழை, காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அமராவதி அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கை கொடுத்து உதவியதால் அணையின் நீர் இருப்பு நிலையாக இருந்து வருகிறது.
இதனால் இந்த ஆண்டு 2 போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் நெற் பயிர்களும் நல்ல முறையில் வளர்ந்து அறுவடையை எட்டியது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமராவதி பகுதியில் திடீரென மழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் வயல்வெளியில் சாய்ந்துவிட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். இந்த நிலையில் அமராவதி மற்றும் கல்லாபுரம் பகுதியில் நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்திரத்தின் உதவியுடன் விவசாயிகள் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் வயல்வெளிகளில் சிதறிக்கிடக்கின்ற வைக்கோலை கட்டுகளாக கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.