மருத்துவ ஊழியர்களுக்கு ஒரே சீருடை; டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு

மருத்துவ ஊழியர்களுக்கு ஒரே சீருடை, டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவினை நிறுவ வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மருத்துவ ஊழியர்களுக்கு ஒரே சீருடை; டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு
Published on

புதுச்சேரி

மருத்துவ ஊழியர்களுக்கு ஒரே சீருடை, டாக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவினை நிறுவ வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

கவர்னர் ஆலோசனை

புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், சுகாதாரத்துறை செயலாளர் முத்தம்மா, இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது புதுவை சுகாதாரத்துறையின் நிர்வாக செயல்பாடுகள், டெங்கு, நிபா பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவர்னரிடம் விளக்கி கூறினார்கள்.

கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

ஒரே சீருடை, பயோமெட்ரிக் பதிவு

புதுவையில் டெங்கு பரவுவதை தடுக்கவும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்திரயான் திட்டத்தை விரிவாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ ஊழியர்கள் அனைவருக்குமான பொதுவான ஒரே சீருடை வழங்கவும், டாக்டர்களின் வருகை பதிவினை கண்காணிக்கும் விதமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவையும் நிறுவ வேண்டும்.

நிபா தொற்று பரவிவரும் சூழலில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யவேண்டும். காய்ச்சல் முகாம்களை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை உருவாக்கவேண்டும். சேவா பக்வாடா கொண்டாட்டத்தையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தூய்மையாக வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பூங்கா அழகுபடுத்துதல்

தொடர்ந்து பூங்காக்கள் மற்றும் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மைய தடுப்பு கட்டைகளை அழகுபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அரசு செயலாளர்கள் மணிகண்டன், அபிஜித் விஜய் சவுத்ரி, உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, பூங்காக்களில் பசுமையை ஏற்படுத்த மரங்கள், செடிகள் நட நடவடிக்கை எடுக்கவும், சாலை ஓரங்களில் மரங்களை பராமரிக்கவும், சாலை நடுவில் உள்ள தடுப்பு கட்டைகளை அழகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். சாலையோரங்களில் உள்ள பெயர் பலகைகளை பராமரிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com