100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கு குறைப்பு


100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கு குறைப்பு
x
தினத்தந்தி 2 Feb 2023 1:09 AM GMT (Updated: 2 Feb 2023 1:11 AM GMT)

100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு 3-ல் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய பட்ஜெட்டில் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 545 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில், அந்த அமைச்சகத்துக்கு முதலில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி, நிதி ஒதுக்கீடு ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டது.

ஆனால், தற்போது ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருப்பதால், நிதி ஒதுக்கீடு 13 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

32 சதவீதம் குறைப்பு

மேலும், ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில், 100 நாள் வேலைத்திட்டத்துக்கான நிதிஒதுக்கீடும் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில், 100 நாள் வேலைத்திட்டத்துக்கு முதலில் ரூ.73 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர், திருத்தப்பட்ட மறுமதிப்பீட்டின்படி ரூ.89 ஆயிரத்து 400 கோடியாக உயர்த்தப்பட்டது.

எனவே, அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது 32 சதவீதம் குறைவு ஆகும். அதாவது, 3-ல் ஒரு பங்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது.

வீடு கட்டும் திட்டம்

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டை போலவே ரூ.19 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'அஜீவிகா' எனப்படும் தேசிய வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.14 ஆயிரத்து 129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கான (கிராமப்புறம்) நிதி ஒதுக்கீடு, ரூ.54 ஆயிரத்து 487 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது, கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கியதை விட அதிகம். சியாம பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.


Next Story