பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது

முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.
பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது
Published on

பழனி,

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத பவுர்ணமியில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. சிறப்பு பெற்ற இத்திருவிழா பழனியில் வருகிற 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிபட பூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி காலையில் தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலா நடக்கிறது.

மேலும் இரவில் வெள்ளி காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, பிடாரி மயில் மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை, புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. திருவிழாவின் 6-ம் நாளான 21-ந் தேதி இரவு 6 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

அடுத்த நாள் 22-ந்தேதி வைகாசி விசாக நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்து அருள்கிறார். அதையடுத்து காலை 11.30 மணிக்கு மேல் திருத்தேரேற்றமும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலை தொடர்ந்து தேரோட்டமும் நடைபெறுகிறது. 25-ந்தேதி கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com