மகாத்மா காந்தியை கொல்ல கோட்சேக்கு, வீர சாவர்க்கர் உதவி செய்தார்- துஷார் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

மகாத்மா காந்தியை கொல்ல சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கு வீரசாவர்க்கர் உதவி செய்ததாக துஷார் காந்தி பரபரப்பு குற்றம்சாட்டினார்.
மகாத்மா காந்தியை கொல்ல கோட்சேக்கு, வீர சாவர்க்கர் உதவி செய்தார்- துஷார் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
Published on: 

மும்பை, 

மகாத்மா காந்தியை கொல்ல சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கு வீரசாவர்க்கர் உதவி செய்ததாக துஷார் காந்தி பரபரப்பு குற்றம்சாட்டினார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மராட்டியத்தில் நடைபயணம் மேற்கொண்டபோது இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சாவர்க்கர் சிறையில் இருந்தபோது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி ஓய்வூதியம் வாங்கியவர், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்தவர் என கூறியிருந்தார்.

ராகுல்காந்தியின் பேச்சுக்கு மராட்டிய எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தநிலையில் வீரசாவர்க்கர் பற்றி மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

பால் தாக்கரே தந்தை எச்சரிக்கை

இதுதொடர்பாக துஷார் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

1930-களில் மகாத்மா காந்தியை கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. அகோலா, விதர்பாவில் காந்தியை கொல்ல திட்டமிட்ட போது, அது குறித்து காந்தியுடன் இருந்தவர்களை எச்சரித்து, அவரது உயிரை பிரபோந்தன் தாக்கரே (பால் தாக்கரே தந்தை) காப்பாற்றினார். பின்னர் அவர் காந்தியை கொல்லும் திட்டத்தை கைவிடுமாறு மராட்டியத்தில் உள்ள சனாதன இந்து அமைப்புகள் மற்றும் அதன் தலைமைக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். சாவர்க்கரும், ஹெட்கேவரும் சனாதன இந்துகளின் தலைவர்களாக இருந்தனர். எனவே பிரபோந்தன் தாக்கரே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். உத்தவ் தாக்கரேயின் சிவசேனா இந்த வரலாறை நினைவுபடுத்த வேண்டும்.

கோட்சேக்கு உதவி செய்தார்

சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்ததேடு நின்றுவிடவில்லை. அவர் மகாத்மா காந்தியை கொல்ல சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கும் உதவி செய்தார். கொலை நடப்பதற்கு 2 நாட்கள் முன்பு வரை, காந்தியை கொல்ல நாதுராம் கோட்சேவிடம் சரியான ஆயுதங்கள் இல்லை.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்திய நலனுக்கானது. அதை தடுக்க ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகளை அனுமதிக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

துஷார் காந்தியின் கருத்து குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், "மகாத்மா காந்தி கொலை வழக்கில் கோர்ட்டு அதன் தீர்ப்பை கூறிவிட்டது. வழக்கில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் சிலர் சாவர்க்கர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புகின்றனர்" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com