தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காலி குடங்களுடன் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் திங்கட்கிழமை காலி குடங்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காலி குடங்களுடன் தர்ணா போராட்டம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் நேற்று காலி குடங்களுடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

தர்ணா போராட்டம்

கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராம மக்கள் சுமார் 100 பேர் ஊர்த் தலைவர்கள் ஜெயராஜ், மாசானம், சுடலை, பஞ்சாயத்துதலைவர் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமையில் காலிக்குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காலி குடங்களுடன் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு மக்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் கிராமத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக குடிநீர் சரியாக வரவில்லை. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ.10 விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் எங்கள் ஊர் வழியாகவே செல்கின்றன. ஆனால் எங்களுக்கு குடிநீர் இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் தலையிட்டு எங்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.

சுங்கச்சாவடி கட்டணம்

காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நாங்கள் காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெரு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி சிவபாரத இந்து மக்கள் இயக்கம் பாலசுப்பிரமணியன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் கூட செயல்படவில்லை. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாத நிலை உள்ளது. தூத்துக்குடி-மதுரை 4-வழிச்சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. ஆகையால் சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கடன் மோசடி

ஏரல் தாலுகா அகரத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த செல்வராணி, மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நாங்கள் ஏற்கனவே செந்தமிழ் மகளிர் சுய உதவிக்குழு என்ற பெயரில் பழைய காயல் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று திருப்பி செலுத்தினோம். அதன்பிறகு மீண்டும் கடன் கேட்ட போது எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் எங்கள் குழுவின் பெயரில் கடன் இருப்பதாக சங்கத்தில் இருந்து கூறுகின்றனர். இதனால் எங்கள் மகளிர் குழுவின் பெயரில் போலியாக முறைகேடு செய்து கடன் பெற்று உள்ளார்கள். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து உள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ரகுராமன் உள்ளிட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் அரசாணையால் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், ஆலையை சுற்றி உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் பண ஆசை காட்டி ஆலைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆகையால் பொதுமக்கள் இடையே சமூக இணக்கத்தை கெடுத்து வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com