

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில், இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு இந்து முன்னனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் யுகேஷ்வரன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
இதில், இந்து முன்னனி நகர பொதுச்செயலாளர் வெங்கடேஷ், ராஜ்குமார், ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட செயலாளர் பிரேம்ஆனந்த், சங்கர்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை ஊர்வலம் பழையபேட்டை நேதாஜி சாலையில் தொடங்கி காந்தி சாலை ரவுண்டானா வழியாக கே.ஆர்.பி., அணைக்கு சென்று பின்னர் சிலைகளை கரைத்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் கடந்த 15-ந் தேதி 565 சிலைகளும், 16-ந் தேதி 544 சிலைகளும், நேற்று 615 சிலைகளும் கரைக்கப்பட்டன. இதையொட்டி கே.ஆர்.பி. அணையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் 25-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டன. இந்த சிலைகளை நேற்று டிராக்டர், மினிவேன் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து சென்று மேள, தாளங்கள் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். இதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் பட்டாளம்மன் ஏரியில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இதே போல தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியிலும் 11 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கவுரம்மா ஏரியில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அரூர் பகுதியில் சிலைகள் வைத்து பக்தர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இந்தநிலையில் 5-ம் நாளான நேற்று அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகள் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக சென்று இருமத்தூர் தென்பெண்ணையாறு உள்ளிட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
இதேபோன்று பாலக்கோடு பகுதியில் நேற்று 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து சென்று ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 30 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.