கீழடியில் தோண்ட, தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்: கழிவுநீர் ஓடையுடன் கூடிய சுவரும் கண்டுபிடிப்பு

கீழடியில் தோண்ட, தோண்ட பழங்கால பொருட்கள் கிடைப்பதால் அவற்றைக்கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளனர். மேலும் கழிவுநீர் ஓடையுடன் கூடிய சுவரும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கீழடியில் தோண்ட, தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்: கழிவுநீர் ஓடையுடன் கூடிய சுவரும் கண்டுபிடிப்பு
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக தொல்லியல் துறை சார்பில் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் சிலரது நிலங்களில் தோண்டப்பட்டு, இந்த பணி நடைபெற்று வருகிறது. இதில் பெரிய, சிறிய பானை, ஓடுகள், மணிகள், எழுத்து பொறிக்கப்பட்ட ஓடுகள், இரும்பு பொருட்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், செம்பினால் ஆன பொருட்கள், செப்பு காசுகள் உள்ளிட்ட பல முக்கியமான பொருட்கள் தோண்டத் தோண்ட கிடைத்து வருகின்றன. நீளச்சுவர்கள், சிறிய சுவர்கள், வட்ட சுவர், உறைகிணறு, குளியல் தொட்டி உள்ளிட்ட கட்டுமானங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் நீதி என்பவரது நிலத்தில் குழிகள் தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் போது, கழிவுநீர் ஓடை வசதியுடன் கூடிய கட்டிட சுவர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம் என கூறப்படுகிறது. எனினும் அந்த சுவரின் நீளத்துக்கு குழி தோண்டிய பின்னர்தான், அந்த சுவர் பற்றிய முழுமையான விவரம் தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த இடத்தில் இருந்து எலும்புகள், அணிகலன் உள்பட பல பொருட்களும் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

கீழடி அகழ்வாராய்ச்சியில் தோண்டத்தோண்ட பழங் கால பொருட்களும், கட்டுமானங்களும் கண்டறியப்பட்டு வருவதால், அவற்றை கண்டு ஆராய்ச்சியாளர்களும், அப்பகுதி மக்களும் வியப்படைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com