விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வு குறித்து அரசு உத்தரவை பரீசிலிப்பதற்காக நடந்த விருதுநகர் நகரசபை அவசர கூட்டத்தில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
Published on

விருதுநகர்,

சொத்து வரி உயர்வு குறித்து அரசு உத்தரவை பரீசிலிப்பதற்காக நடந்த விருதுநகர் நகரசபை அவசர கூட்டத்தில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவசர கூட்டம்

தமிழக அரசு சொத்து வரி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவை செயல்படுத்துவதற்காக விருதுநகர் நகரசபையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

நகரசபைத்தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் சையது முஸ்தபா கமால், கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு குறித்த அவசர கூட்டத்தில் விவாதப்பொருள் பட்டியலில் நகர சபைக்கு ரூ.44 கோடியே 47 லட்சம் நிதி தேவைப்படும் நிலை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கவுன்சிலர் பால்பாண்டி தனது ஆட்சேபனையை தெரிவித்ததோடு நகர் மக்கள் நகரசபைக்கு நிதி தேவைப்படுவதால் சொத்து வரி உயர்வு செய்யப்படுகிறது என்று கருதும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ஜெயக்குமார், சொத்து வரி உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.

வெளிநடப்பு

அ.ம.மு.க. கவுன்சிலர் ராமச்சந்திரன் விதிமுறைப்படி 3 வருடங்களுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்வை செய்திருக்கவேண்டும். அதை நகராட்சி நிர்வாகம் செய்யாத நிலையில் தற்போது திடீரென சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்துவது பொதுமக்களை பாதிக்கும் என்று கூறி வெளிநடப்பு செய்தார். இதேபோன்ற அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சரவணன் மிக்கேல் ராஜ் மற்றும் சுயேச்சை கவுன்சிலர் முத்துலட்சுமி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் அரசு விதிமுறைப்படி சொத்து வரி உயர்வு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் உமாராணி பேபி, முத்துராமன் ஆகியோர் நகரில் அடிபம்பு மற்றும் விசை பம்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றனர். நகராட்சி கடைகளுக்கு டெண்டர் விடும் போது டெபாசிட் தொகையை ரூ.1 லட்சத்திற்கு பதில் ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். ஏலம் விட்ட பிறகு 9 மாதவாடகை தொகையை டெபாசிட்பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தை தலைவர் ஏற்றுக்கொண்டார்.

தண்ணீர் வினியோகம்

தூய்மை பணியாளர் காலனியில் 10 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை முறையாக சீரமைக்க வேண்டும் என்று கவுன்சிலர் மதியழகன் கூறினார். குடிநீர் வினியோகத்தில் தாமிரபரணி தண்ணீர் ஒரு பகுதியிலும் ஆனைக்குட்டம் தண்ணீர் மறுபகுதியிலும் வினியோகிக்கப்படுவதால் ஆனைக்குட்டம் தண்ணீர் உப்பாக உள்ளதால் அனைத்து பகுதியிலும் தாமிரபரணி தண்ணீர் வினியோகம் செய்ய கோரப்பட்டது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் மாதவன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com