

மதுரை,
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதிக நபர்களை ஏற்றும் ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார்.
பெர்மிட் ரத்து
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநகரில் தற்போது பெர்மிட் பெற்று இயங்கும் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி செல்வது விதிகளை மீறிய செயல். பயணிகள் அமரும் உள்கட்டமைப்புகளை விதிகளுக்கு மாறாக மாற்றி கூடுதல் பயணிகளை ஏற்றி கொண்டு ஆட்டோக்களை இயக்கினால் அந்த ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பெர்மிட்டை ரத்து செய்ய வேண்டும்.
நடவடிக்கை
அரசு பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி-கல்லுரி மாணவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும். இந்த குழு விதி மீறும் மாணவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எதிர்காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வகையில் போக்குவரத்து கழகமும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்து கழகம், உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தொடர்பாக நுகர்வோர் அமைப்பினர் தெரிவித்த புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.