பணிபுரியும் புது மணப்பெண்ணின் வேலைகளை எளிதாக்கும் வழிகள்

புதிதாக திருமணமான பெண்கள் வேலை, வீட்டு நிர்வாகம், குழந்தைப்பேறு என பலவற்றை சந்திக்க நேரிடும். இத்தகைய சவால்களை, அவர்கள் திறமையோடு எதிர்கொள்வதற்கான வழிகளைப் பார்ப்போம்.
பணிபுரியும் புது மணப்பெண்ணின் வேலைகளை எளிதாக்கும் வழிகள்
Published on

ற்போதைய பொருளாதாரச் சூழலில், வளர்ச்சிப் பாதையில் குடும்பம் செல்வதற்கு ஆண்களும் பெண்களும் சமமாக பங்களிக்க வேண்டும். இருப்பினும் பெண்கள் வீட்டு நிர்வாகம், பணியிடத்தில் வேலைப்பளு ஆகியவற்றில் அதிக சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதிலும் புதிதாக திருமணமான பெண்கள் வேலை, வீட்டு நிர்வாகம், குழந்தைப்பேறு என பலவற்றை சந்திக்க நேரிடும். இத்தகைய சவால்களை, அவர்கள் திறமையோடு எதிர்கொள்வதற்கான வழிகளைப் பார்ப்போம்.

அதிகாலையில் கண்விழித்தல்

அதிகாலையில் எழுந்தால் உங்கள் வீட்டு வேலைகளை செய்து முடிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும். காலையில் எழுந்தவுடன், அன்றைய நாளில் செய்ய வேண்டியப் பணிகளை திட்டமிட வேண்டும்.

பின்பு உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். இதன் மூலம் அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் செய்வதற்கு தேவையான சக்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

பணிகளை தீர்மானித்தல்

வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் செய்ய வேண்டிய பணிகளை தனித்தனியாகப் பட்டியல் தயாரிக்கவும். இதன் மூலம் வேலைகளை முன்கூட்டியே முடிக்க முடியும்.

துணையிடம் உதவி கோருதல்

இன்றைய இளைஞர்கள் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஆர்வமுடன் உதவுகின்றனர். எனவே உங்கள் கணவருடன் கலந்துபேசி வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

அலுவலக நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இருந்தால், உங்கள் திட்டத்துக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். பெண்களுக்கு வீட்டு வேலையில் கணவருடைய உதவி கிடைத்தால், மற்ற வேலைகளை எளிதாகப் பார்க்க முடியும்.

ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்தல்

தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் அலுவலகப்பணி, உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதாக இல்லையென்றால், உங்களுக்கு வசதியான மற்றொரு வேலையைத் தேடுவதற்கு தயங்க வேண்டாம்.

குடும்பத்தினரிடம் ஆலோசித்தல்

வீட்டு நிர்வாகம் மற்றும் பணியிடத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினரிடம் ஆலோசியுங்கள்.

உதாரணத்துக்கு குழந்தைக்காக திட்டமிடும்போது, தற்போதைய சூழல் அதற்கு ஏற்றதாக இருக்குமா? அத்தகைய சூழ்நிலையில் எவற்றையெல்லாம் சமாளிக்க வேண்டும்? என அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே ஆலோசிப்பது நல்லது.

வேலைகளை எளிதாக்குதல்

பணிபுரியும் பெண்களுக்கு வீட்டு வேலைகளை நிர்வகிப்பதில் மின் சாதனங்கள் உதவுகின்றன. உங்கள் வேலைகளுக்கு தகுந்தாற்போல சாதனங்களை வாங்கி பயன்படுத்துங்கள். இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தி, பயனுள்ள வகையில் செயல்பட முடியும்.

நீண்ட நேர வேலை

அலுவலகத்தில் பணிபுரியும் நேரத்தைத் தாண்டி கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், அதை முன்கூட்டியே துணையிடம் தெரிவிக்கலாம். இதன் மூலம் வீட்டில் உங்கள் வேலைகள் தடையின்றி நடைபெறுமாறு ஏற்பாடு செய்ய முடியும்.

எல்லையை வரையறுத்தல்

அலுவலகத்தில் முடிக்காமல் விட்டுவந்த வேலையை எண்ணி வீட்டில் கவலைப்படுவது இயல்பானது. அதேசமயம் அதற்கு ஒரு எல்லையை வரையறுக்க வேண்டும். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் வீட்டு நிர்வாகத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அலுவலக அழைப்புகளை ஏற்பது, மின்னஞ்சல்களுக்கு பதில் அளிப்பது போன்றவற்றை முடிந்தவரை தவிர்க்கலாம். இதன் மூலம் குடும்பத்துக்கு நேரம் செலவிட முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com