

பெங்களூரு:
ராய்ச்சூர் மாவட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். அப்போது அவரிடம், ராய்ச்சூரில் சில பகுதிகளை தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்க வேண்டும், அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கூறி இருப்பது குறித்து பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
ராய்ச்சூர் மாவட்டத்தில் சில பகுதிகளை தெலுங்கானாவுடன் இணைக்க வேண்டும் என்று, அம்மாநில முதல்-மந்திரி கூறி இருப்பது வேடிக்கையாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற கருத்துகளை அவர் கூறி வருகிறார். தெலுங்கானா மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் அவ்வாறு பேசி வருகிறார். பல்வேறு போராட்டங்களை நடத்தி தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகி உள்ளது.
அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் உழைக்க வேண்டும். ராய்ச்சூரில் இருந்து ஒரு அங்குலம் இடத்தை கூட தெலுங்கானாவுக்கு விட்டு கொடுக்கமாட்டோம். ராய்ச்சூர் மாவட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ராய்ச்சூர் மாவட்டத்திற்கு என்று தனியாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.